ஆன்மீக புத்தக விநியோகம்

ஸ்ரீல பிரபுபாதா தனது கடிதம் ஒன்றில், எனது புத்தகங்கள் மற்றும் பகவத்கீதை உண்மையுருவில் மூலமாக நான் யாரேனும் ஒருவரையாவது கிருஷ்ண உணர்விற்கு கொண்டு வந்தால் போதும் எனது உழைப்பை வெற்றியாக கருதுவேன்” என்று எழுதினார். (ஜூன் 12, 1969 – ஆர்.சால்ஸன் அவர்களுக்கு) மேலும் மற்றோரு பக்தரிடம்,”இந்த ஆன்மிக புத்தக விநியோகம் என்பது மிக முக்கியமான சேவையாகும்.இதை வளர்க்க நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாரொருவர் எமது

கிருஷ்ணா புத்தகம்,பக்தி ரசாமிருத சிந்து, பகவத் கீதை உண்மையுருவில் புத்தகங்களை படிக்கிறாரோ அவர் உறுதியாக கிருஷ்ண உணர்வு உடையவர் ஆகி விடுவார். ஆகவே எப்படியாவது பள்ளிகள்,கல்லூரிகள், நூலகங்கள் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட விற்பனையின் மூலமாகவோ நாம் இந்த ஆன்மிக புத்தக விநியோகத்தை சிறப்பாக செய்ய வேண்டும். இது கிருஷ்ணருக்கு செய்யும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க சேவை ஆகும்.” என்று எழுதினார். (மார்ச் 5, 1971 – வாமனதேவாவிற்கு )

இப்படியாக தனது புத்தக விநியோகத்தின் முக்கியத்துவத்தை பற்றி மேலும் நூற்றுக்கணக்கான கடிதங்களில் பக்தர்களிடம் விளக்கியுள்ளார்.

ஒருவர் தன் வாழ்நாளில் ஸ்ரீல பிரபுபாதாவின் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை படித்தால் கூட அவரது ஆன்மீக வாழ்வு தொடங்கிவிடும். அவர் இன்றோ அல்லது நாளையோ அல்லது சில காலம் கழித்தோ அல்லது பல காலம் கழித்தோ தனது வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொள்ளத் துவங்கி விடுவார். ஏனெனில் ஸ்ரீல பிரபுபாதாவின் புத்தகங்களில் அவர் முற்றிலும் சாஸ்திரங்களின் கூற்றுக்களை அப்படியே கொடுத்திருக்கின்றார். தனது சொந்த கருத்துக்கள் ஏதும் எழுதாமல் பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகளை அப்படியே எடுத்து கொடுத்திருக்கின்றார்.

அதன் காரணத்தாலேயே இன்று உலகில் யாராலும் சாதிக்க முடியாததை ஸ்ரீல பிரபுபாதா செய்து காட்டியுள்ளார். ஆம் ஆங்கிலேயர்களையும் அமெரிக்கர்களையும் பக்தர்களாக்கி மேலை நாடுகளில் லட்சக்கணக்கானோரை நமது வேத கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார். இதில் ஆன்மிக புத்தக விநியோகம் முக்கிய பங்கு வகித்துள்ளது.பல மேலை நாட்டு பக்தர்கள் முதன் முதலில் ஸ்ரீல பிரபுபாதாவின் புத்தகத்தை பெற்று, அதை படித்து பக்தர்கள் ஆகியுள்ளனர். ஆகவே மதுரை, திருநெல்வேலி,பெரியகுளம் மற்றும் தென் மாவட்ட நாம ஹட்டாக்களில் பயிற்சி செய்யும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை இந்த புத்தக விநியோக சேவையில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பலர் ஸ்ரீல பிரபுபாதாவின் ஆன்மிக புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை பெரும் வாய்ப்பு பெறுகின்றனர். அதை அவர்கள் தங்கள் வாழ்வில் எப்போதாவது படித்தாலும் கூட அவர்கள் வாழ்வு புனிதமடையும். மேலும் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள், அலுவலகங்கள், தொழில் ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள், திருவிழாக்கள் என எல்லா இடங்களிலும் ஸ்ரீல பிரபுபாதாவின் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன.