ஸ்ரீராதாஷ்டமி

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமித் திருநாள்  ‘கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாள்  ‘ஸ்ரீராதாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதிராதா ராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விருப்பம் கொண்டார். எனவே கிருஷ்ணர் பிறந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடிய யமுனை நதியில் ‘தங்கத் தாமரையில் ஒரு பெண் குழந்தையாக அவதரித்தார். அந்நகர மன்னர் ‘விருஷபானு என்பவர் யமுனைக்கு நீராடச் சென்ற போது ஜொலிக்கும் அந்தத் தாமரையைக் கண்டு அதிசயத்தார். பிறகு அருகே சென்ற போது அத் தாமரையில் இருந்த தெய்வீகமான பெண் குழந்தையை பார்த்ததும் தன் அரண்மனைக்கு கொண்டு வந்தார். பெரியாழ்வாருக்கு,  தாயார் ஆண்டாள் தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதி ராதாரணி அருள்புரிந்தார்.

ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருஸ்தலமான ‘ராவல் கிராமத்தில் தவழும் குழந்தையாக வீற்றிருக்கிறார்.   ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராவல் கிராமம்.

சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்களின் கூற்றுகளில் இருந்து ஸ்ரீமதி ராதாராணி பற்றி
ஸ்ரீல பிரபுபாதா வழங்கிய முக்கியமான குறிப்புகள்

ஸ்ரீமதி ராதாரணி, தூய பக்தையும், பகவான்  ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும்  தலைமையானவர்.

எங்கு ஸ்ரீமதி ராதா ராணி இருக்கிறாரோ, அங்கு எதற்கும் பஞ்சம் என்பதே கிடையாது

ஸ்ரீகிருஷ்ணரை ஸ்ரீமதி ராதாராணியுடன் சேர்த்து வழிபடுபவர்கள் விரைவில் கிருஷ்ண பக்தியில் முன்னேற்றம் அடைவதுடன் அனைத்து வளங்களையும் பெறுவர்.

சாஸ்திரங்கள் ஸ்ரீமதி ராதாராணி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உட்சக்தி ஆவார் என்று குறிப்பிடுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி ஸ்ரீகிருஷ்ணரின் மிகச் சிறந்த பக்தர் ஆவார். ஏனென்றால் ஸ்ரீமதி ராதாராணி, ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவுகடந்த அன்பு செலுத்தினார்.

ஸ்ரீமதி ராதாராணி எப்போதும் எல்லா பக்தர்களின் நலனை விரும்புபவராக இருக்கிறார். நாம் ஸ்ரீமதி ராதாராணியிடம் பிரார்த்திக்க வேண்டும்.

நீங்கள் நேரடியாக கிருஷ்ணரிடம் செல்ல முடியாது. ஆனால் ஒரு கிருஷ்ண பக்தர் உங்களிடம் திருப்தி அடைந்தால் அவர் உங்களை கிருஷ்ணரிடம் சிபாரிசு செய்வார். தன் பக்தனின் வேண்டுகோளை கிருஷ்ணர் அவசியம் ஏற்றுக் கொள்வார். எனவே ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் கருணையை எளிதில் பெறலாம்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தி தொண்டு செய்வது என்றால், ஸ்ரீமதி ராதாராணியின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதே ஆகும்.

விருந்தாவனத்தில் உள்ள பக்தர்கள், பக்தியின் பரிபக்குவ நிலையை அடைய தங்களை ஸ்ரீமதி ராதாராணியின் பாதுகாப்பில் வைத்துக் கொள்கிறார் கள். குறிப்பாக,  பக்தி சேவை என்பது இந்த  ஜடவுல கைச் சேர்ந்தது அல்ல; பக்தி சேவை என்பது நேரடி யாக ஸ்ரீமதி ராதாராணியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது:

* அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்.

* ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம்     உச்சரிக்க வேண்டும்.

* ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம்   செய்ய வேண்டும்.

ஒருவர்ஸ்ரீமதி ராதாராணியிடம் சரணடைந்தார் என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உள்ள
அனைத்து பிரச்சனைகளும்மிக எளிதாக தீர்ந்து விடும்.

– ஸ்ரீமத் பாகவதம் 4.8.24 பொருளுரை

ஸ்ரீமதி ராதாராணியை வழிபடுவதற்கு எளிய வழி அவருடைய திருநாமம் அடங்கிய ‘ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதே ஆகும். ஏனென்றால் இம்மந்திரத்தில் உள்ள ‘ஹரே என்ற  சொல் ஸ்ரீமதி ராதாராணியை குறிப்பதாகும்.


ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

தேவீ க்ருஷ்ண-மயீ ப்ரோக்தா
ராதிகா பர-தேவதா
ஸர்வ-லக்ஷ்மீ-மயீ ஸர்வ-
காந்தி: ஸம்மோஹினீ பரா

“திவ்ய தேவதையான ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி மறுபாகமாவாள், எல்லா லக்ஷ்மி-கணங்களுக்கும் அவளே மையமாவாள். எல்லாரையும் வசீகரிக்கும் முழுமுதற் கடவுளை வசீகரிப்பதற்குத் தேவையான எல்லா வசீகரமும் பொருந்தியவள். அவளே பகவானின் அந்தரங்க சக்திகளில் உயர்ந்தவளாவாள்.” (பிருஹத்-கௌதமீய-தந்த்ர)


“ராதா கிருஷ்ண தத்துவம் முக்தி பெற்ற நபர்களால் அறியப்பட வேண்டியதாகும், கட்டுண்ட ஆத்மாக்களால் அல்ல. நாம் முக்தர்களாக மாறும் அந்த நிலைக்காக காத்திருப்போம். அப்போது நம்மால் ராதா-க்ருஷ்ண-ப்ரணய விக்ருதிர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ராதையும் கிருஷ்ணரும் பௌதிகத் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்ல… கிருஷ்ணரை சாதாரண ஆண் என்றோ, ராதையை சாதாரண பெண் என்றோ நாம் கருதக் கூடாது. அவர்களே பரம பூரண உண்மை. ஆனால் அந்த பூரண உண்மையில், ஆனந்த சக்தி உள்ளது, அது ராதா-கிருஷ்ணரின் லீலைகளில் வெளிப்படுகிறது.”