ஸ்ரீலபிரபுபாதா

‘ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.

1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய்தந்தையர் இவருக்கு இட்ட பெயர் ‘அபய் சரண்தே’.   அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார்.

பிறகு 1922ல் தனது ஆன்மீக குருவான ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களை சந்தித்த போது, அவர் இட்ட கட்டளை, உலகெங்கும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்பதே ஆகும்.

இதனை தன் வாழ்வின் உயிரும் மூச்சுமாக கொண்டார். தனது கல்லூரி படிப்பின் போதும், குடும்பஸ்தராகவும்,  தொழிலதிபராக இருந்த போதும் கூட எப்படியாவது தனது குருவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று முயன்று கொண்டே இருந்தார். பல்வேறு கோணங்களில் பிரச்சாரமும் செய்து வந்தார்.

1959ல் முழுமையாக துறவறம் பூண்டு பக்தி வேதாந்த ஸ்வாமி”  என்று சந்நியாச பெயரை ஏற்று விருந்தாவனம் சென்றார். அங்கிருந்தவாறு முதலில் இந்தியாவில் தான் இஸ்கான் இயக்கத்தை வேரூன்ற விரும்பினார் பிரபுபாதா. ஆனால் அதற்கான பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அது நிறைவேறாமல் போனது. 

பிறகு  ‘மேலை நாடுகளுக்கு சென்று ஆங்கிலம் பேசும் மக்களிடம் கிருஷ்ணரை பற்றி எடுத்துக் கூறு” என்ற தனது ஆன்மீக குருவின் முக்கியக் கட்டளையை  செயல்படுத்தும் பொருட்டு தீவிர முயற்சி செய்தார்.

பலமுறை முயற்சிக்குப் பின், 1965ல் மிகவும் முதிர்ந்த 69வது வயதில்   ‘ஜலதூதா’ என்ற சரக்கு கப்பலில் புறப்பட்டார் நியூயார்க் நகரத்திற்கு.

காவியுடை காற்றில் படபடக்க, இடையே இடையே ஏற்பட்ட மாரடைப்பையும் தாங்கிக் கொண்டு சுமார் 35 நாட்கள் உப்புக் காற்று கடல்பயணத்திற்கு பிறகு,  கிருஷ்ணரையே தனது ஒரே இலக்காக நம்பி  அமெரிக்க மண்ணில்   தன்னந்தனியாக தடம் பதித்தார்.

நியூயார்க்கின் நகரத்தின் மக்கள் கூடும் இடங்களில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை பாடி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். படிப்படியாக இளைஞர்களும், யுவதிகளும் பிரபுபாதாவின் உரைகளையும், நாமசங்கீர்த்தனத்தையும் கேட்டு நல்வழிப்பட்டனர்.

தன்னந்தனியாக ஒரு வருட காலம் பல கடுமையான போராட்டங்களை சந்தித்த பின் வெற்றிகரமாக 1966ல்  உலகம் தழுவிய ‘இஸ்கான்’ இயக்கத்தை நிறுவினார் பிரபுபாதா.  பிறகு வெகு குறுகிய காலத்திலேயே, பிரபுபாதாவின் தீவிர பிரச்சாரத்தின் பலனாக உலகின் பல பாகங்களிலும் இஸ்கான் நிறுவப்பட்டது.

மேலும் ஸ்ரீலபிரபுபாதா உரை எழுதிய பகவத்கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட ஆன்மீக புத்தகங்களுக்கு  படித்த அறிஞர்களிடமும், மாணவர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  பிரபுபாதாவின் புத்தகங்களை படித்த ஏராளமானோர் வாழ்க்கையின் உண்மை நோக்கத்தை அறியும் வாய்ப்பை பெற்றனர். 

இப்படியாக பிரபுபாதா நிறுவிய இஸ்கான் கோயிலும், எழுதிய புத்தகங்களும் பெரும் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியது. 

பிறகு 1971ல் மேலை நாட்டு சீடர்கள் பலருடன் இந்தியா திரும்பிய பிரபுபாதா, வெற்றிகரமாக இந்தியாவிலும் இஸ்கான் இயக்கத்தை நிர்மாணித்தார்.  மேலை நாட்டினர் பலரும் நம் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கிருஷ்ண பக்தர்களாக மாறி இருப்பதை கண்டு இந்திய மக்கள் உடனே ஏற்க ஆரம்பித்தனர்.

இந்தியாவில் பம்பாய், விருந்தாவன், மாயாப்பூர் போன்ற இடங்களில் இஸ்கான் கோயில் கட்டுமானப் பணிகளை பிரபுபாதா தனது  நேரடி கண்காணிப்பில் துவக்கினார். 

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தரத்தை மேற்பார்வை செய்யும் பொருட்டு ஸ்ரீல பிரபுபாதா தனது முதிர்ந்து வயதிலும் உலகம் முழுவதையும் 12 முறை வலம் வந்து பிரச்சாரம் செய்தார். தவிர 108க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்களையும், 4000க்கும் மேற்பட்ட சீடர்களையும் உருவாக்கியிருந்தார்.

இரவு பகலாக கண்விழித்து, 80க்கும் மேற்பட்ட ஆன்மீக புத்தகங்களை தனது பக்தி வேதாந்த புத்தக அறக்கட்டளையின் மூலம் வெளியிட்டார். அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் 56 உலக மொழிகளில் அச்சிடப்பட்டு லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. குறிப்பாக பகவத் கீதை உண்மை யுருவில் எனும் நூல் பல நூற்றுக் கணக்கான அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 1977ல்,  மிக மிக புனிதமான இடமான விருந்தாவனத்தில், தன் சரீரத்தை விட்டு கிருஷ்ணரின் திருவடி அடைந்தார் பிரபுபாதா.

சற்று யோசித்து பார்த்தோம் என்றால்,  பேரன், பேத்திகளுடன் விளையாடி ஈசி சேரில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் வயதில் தான் இவ்வளவு சாதனைகளையும் செய்தார் பிரபுபாதா.

மூட நம்பிக்கைகள் நிறைந்த சமயம் என்று வெளிநாட்டவரால் நகையாடப் பட்ட நமது சனாதன தர்மம், இன்று விஞ்ஞான பூர்வமான உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த வாழ்வு நெறி என்று தான் நிறுவிய ‘இஸ்கான் மூலம் முழுவதும் பாராட்டும் வண்ணம் செய்தார் பிரபுபாதா.

அமெரிக்காவின் வானாளவிய கட்டடங்களில் வாழும் நவ நாகரீக மனிதர்களில் துவங்கி, அமேசன் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வரை; ஜனநாயக நாடுகளில் வாழும் சுதந்திர மக்களிலிருந்து, கம்யூனிச நாடுகளின் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள் வரை அனைவருக்கும் பாரதத்தின் சனாதன தர்மத்தைப் பற்றியும், பகவத்கீதை, பாகவதம் போன்ற சரித்திர நூல்களைப் பற்றியம் இன்று வரை பறைசாற்றி வருகிறது இவர் நிறுவிய ‘இஸ்கான் கோயில்கள்.

உண்மையிலேயே சுவாமி ஸ்ரீலபிரபுபாதாவின் சாதனையை ஒரு ஆன்மீகப் புரட்சி என்று தான் கூற வேண்டும். பிரபுபாதா வாழ்ந்த வாழ்வும், காட்டிய வழிகளும் மிக மிக போற்றுதற்குரியது.  

உறுதியையும் வைராக்கியத்தையும் மனதில் வேரூன்றச் செய்யும் ஸ்ரீலபிரபுபாதாவின் வாழ்க்கை வரலாற்றை படித்த ஒருவரால் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீலபிரபுபாதாவின் முழு வாழ்க்கை வரலாறு புத்தகம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இஸ்கான் கோயில் புத்தக ஸ்டாலில் கிடைக்கிறது.

தயவு செய்து வாங்கி படியுங்கள்,  உண்மையில் ஸ்ரீலபிரபுபாதா எப்படி பட்டவர்? என்பது புரியும்.

மேலும் ஸ்ரீலபிரபுபாதா பற்றி படிக்க . . .