தீபாவளி வந்த விதமும், பரவிய விதமும்?

தீபாவளி – தீபம் என்றால்  தீபத்தையும், வளி அல்லது பளி என்றால் ‘நிறைய’ (மிக அதிகமான) என்றும் பொருள் படும்.  அதாவது   அதிகமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியை தெரிவிக்கும் நாளே தீபாவளி. 

அதாவது, தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன் அதிகாலையில்,  மகா லெக்ஷ்மி -எண்ணெய்யிலும், கங்கா தேவி – நீரிலும் வீற்றிருக்கின்றனர். எனவே ஒருவர்  அனைத்து நல்வளங்களையும் பெற எண்ணெய் குளியல் செய்து, சுடுதண்ணீரால் நீராடி, புதிய ஆடைகளை அணிந்து பகவானை பிரார்த்திக்க வேண்டும். தவிர இல்லங்களில் தீபங்களை  ஏற்றுவதும், கோயில்களில் சென்று  தீப ஆரத்தி செய்வதும் மிகவும் சிறப்புக்குரியதாகும்.  குறிப்பாக நல்ல பதார்த்தங்களை செய்து பகவானுக்கு நைவேத்தியம் செய்து தாங்களும் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

‘‘தீபாவளி வந்த விதம்’’

ஒருசமயம் அசுரனான ராவணனை அழித்து விட்டு,  பகவான் ராமச்சந்திரர் சீதா தேவி மற்றும் லக்ஷ்மணருடன் நாடு திரும்பினார். பதினான்கு வருட வனவாஸத்திற்கு பின் ஸ்ரீராமர் நாடு திரும்பியதாலும், ராஜ்யத்தை ஏற்றதாலும் பெரு மகிழ்ச்சி அடைந்த மக்கள் தங்கள் இல்லங்களிலும், வீதிகளிலும் எண்ணற்ற தீபங்களை ஏற்றியும், அவரது திருநாமங்களை உச்சரித்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமான ஸ்ரீராமரை வழிபட்டனர். அன்று முதல் இந்நன்னாள் ‘‘தீபாவளித் திருநாளாக’’ கொண்டாடப்பட்டு வருகிறது.

‘‘தீபாவளி பரவிய விதமும், சிறப்புக்குரியதாகிய விதமும்’’

இதே போல் ஒருமுறை தீபாவளிக்கு முந்தைய தினம், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், மக்களுக்கு நிறைய தொல்லைகளை கொடுத்து வந்த நரகாசுரன் என்றழைக்கப்படும் பௌமாசுரனை தனது சுதர்சன சக்கரத்தால்  வதம் செய்தார்.   இச் செய்தி  புவியெங்கும்  பரவவே ஏற்கனவே தீபாவளி ஏற்பாட்டில் ஆர்வமுடன் இருந்த மக்கள், வெகு சிறப்பாக அந்த தீபாவளியை, வழக்கத்திற்கும் அதிகமாக எண்ணற்ற தீபங்களை ஏற்றி  பகவானை வழிபட்டு மகிழ்ச்சியுற்றனர். இவ்வாறாக அன்றைய தினம் முதல் தீபாவளி திருநாள் மேலும் சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட காரணமாகியது.

‘‘ஐந்து விழா நாட்கள் கொண்டது தீபாவளி’’ பொதுவாக தீபாவளி ஐந்து நாட்கள் சிறப்பு வாய்ந்ததாகும்.   தீபாவளிக்கு முன் இரண்டு நாட்கள் – ஆரம்ப நாள் மற்றும் நரக சதுர்தசி தீபாவளி ஆகும். பின் இரண்டு நாட்கள் – கோவர்த்தன பூஜை மற்றும் ரக்ஷா பந்தன் எனப்படும் தீப திருநாட்களாகும்.  மூன்றாம் நாள் – ( நவம்பர் 6) லெக்ஷ்மி பூஜையும்,  ராமர் அயோத்தி திரும்பிய தீபாவளி திருநாளாகும். மேலும் லெக்ஷ்மி தேவியும், கங்கா தேவியும் அன்றைய தினம் தான் விசேஷமாக எண்ணெய்யிலும், நீரிலும் வீற்றிருக்கின்றனர்.   இவ்வாறாக தீபாவளி திருநாள் முன் இரண்டு, பின் இரண்டு விழா நாட்கள் உடையதாக நடுவே அமைந்துள்ளது. ஆக,  தீபாவளி ஐந்து நாட்கள் சிறப்புடையதாகும்.

தீபாவளி அன்று செய்ய வேண்டியது என்ன?

1. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.

2. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீராமரை வழிபட வேண்டும்.  முக்கியமாக கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று ‘‘நெய் தீப ஆரத்தி’’ காட்ட வேண்டும்.

3. ‘‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே’’ என்ற பதினாறு வார்த்தைகளடங்கிய மந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறையாவது சொல்ல வேண்டும்.

4. இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

5. உணவு வகைகளில் அசைவத்தை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக  இறைவனுக்கு உகந்த நன்னாளில் அசைவம் பயன்படுத்துவது  பகவானை அவமதிப்பது போன்றதாகும். மேலும் எதிர்மறை விளைவுகளும் ஏற்படும். எனவே அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. மிக முக்கியமாக குடும்பத்துடன் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பகவானை வேண்டி, ‘‘நெய் தீப ஆரத்தி’’ காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் குடும்பம் முழுவதும் பகவானின் கருணையை பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றது.

விசேஷ தீபத் திருவிழா

தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களும்  இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் விசேஷ தீபத் திருவிழா நடைபெறுகிறது. கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்ப பூஜைகள் நடைபெறும்.  மாலை 6.30 மணியளவில் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தங்கள் கரங்களால் தாங்களே நேரடியாக சுவாமிக்கு, நெய் தீப ஆரத்தி காட்டலாம்.  ஜாதி, மத, இன, பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்று பயன்பெறலாம்.