ஸ்ரீகௌர பூர்ணிமா

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு அவதார திருநாள்:

அவதார நோக்கம்:

சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும். அதாவது கிருஷ்ண பக்தர் ஒருவர் எவ்வாறு அவரது நாமத்தை ஜபிக்க வேண்டும் எவ்வாறு பக்தி நெறியுடன் வாழ வேண்டும் என்பதை இந்த அவதாரத்தின் மூலம் உணர்த்தினார். பொன்னிறத்தில் அவதரித்ததால் ஸ்ரீகௌரங்கர் என்றும் அழைக்கப்பட்டார்.

கௌர பூர்ணிமா:

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு மேற்கு வங்காளத்தில் உள்ள நவ தீவுகளில் ஒன்றான ‘மாயாப்பூர்’ எனும் புண்ணிய ஸ்தலத்தில் பௌர்ணமியன்று அவதரித்தார். ‘கௌர’ என்றால் பொன்னிற மேனியுடைய ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவையும், ‘பூர்ணிமா’ என்றால் அவர் அவதரித்த பௌர்ணமி நாளையும் குறிக்கிறது. எனவே ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் அவதாரத் திருநாள் ‘கௌர் பூர்ணிமா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

சாஸ்திரங்கள்:

இவருடைய அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம், முண்டக உபநிஷத், சைதன்ய உபநிஷத், தேவி புராணம், கருட புராணம், பத்ம புராணம் மற்றும் நாரத புராணம் உள்ளிட்ட ஏராளமான வேத சாஸ்திரங்களில் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக பக்தர் வடிவில் அவதரித்து ்ஹரி நாம சங்கீர்த்தனத்தை எடுத்துரைப்பார் என்று முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ளது. முண்டக உபநிஷத்தில், யார் ஒருவர் தங்க நிறம் வாய்ந்த முழு முதற் கடவுளை தரிசிக்கிறாரோ அவர் முக்தி பெறுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர ஸ்ரீமத் பாகவதத்தில், கலியுகத்தில் புத்திசாலியான மக்கள், ஹரிநாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு எப்பொழுதும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை பாடும் முழுமுதற்கடவுளின் அவதாரத்தை, ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை போற்றி வழிபடுவார்கள் என்றும், அவரது நிறம் கருநீலமாக இல்லாவிடினும் அவர் ஸ்ரீகிருஷ்ணரே ஆவார் என்றும், அவர் எப்போதும் தனது சகாக்கள் மற்றும் பக்தர் குழுவுடன் இருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவதாரத்தில் பகவான் வழங்கிய உபதேசம்:

யார் ஒருவர் பகவானின் திருப்பெயருக்கு சரணடைகிறாரோ, அதாவது ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிக்கிறாரோ அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடு படுகிறார். தொடர்ந்து உச்சரிப்பவர் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து மனித வாழ்வின் இறுதி நோக்கமான பகவானின் திருஸ்தலத்தினை அடைவர். இம் மஹா மந்திரத்தை உச்சரிக்க எந்த விதமான, கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் – இதுவே மக்களை நல்வழிப்படுத்த இந்த அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காட்டிய நல்வழியாகும். இதனை ்ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப யோகம் அல்லது ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுண்டு.

தென்னிந்திய விஜயம்:

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஆறு வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் முக்கியத்துவத்தை கிராம, நகரங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் எடுத்துரைத்தார். இவரது தென்னிந்திய விஜயத்தை நினைவுபடுத்தும் வண்ணம் திருச்சி-ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே இவரது பாதுகை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தவிர மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலுக்கும், திருநெல்வேலி நவதிருப்பதி போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் இவர் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் கருணை:

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் பூரண கருணையை பெற விரும்பும் ஒருவர் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறை தினசரி உச்சரிக்க வேண்டும். முடிந்தளவு மற்றவர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.

கௌர பூர்ணிமா விழா கொண்டாடும் விதம்:

ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாள் எப்படி கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறதோ, அதே போல் ஸ்ரீகிருஷ்ணரின் பக்த அவதார மான ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருநாள் கௌர பூர்ணிமா” வாக கொண்டாட வேண்டும். கௌர பூர்ணிமா நாளில் சந்திரோதயம் வரை விரதம் இருந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பிறகு அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை உட்கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இதற்காக உலகெங்கும் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ண கோயில்களில் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் திருவிக்ரஹங்களுக்கு மஹா அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

கெளர பூர்ணிமா விரத சங்கல்பம்:

கெளர பூர்ணிமா அன்று விரதம் இருக்கும் பக்தர்கள்
👉 https://forms.gle/yntGrXRgzHQzEKQL7
என்ற லிங்கில் சென்று சங்கல்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

ஏதேனும் சந்தேகங்களுக்கு 7217216001 என்ற இஸ்கான் வாட்ஸ் ஆப்–ல் தொடர்பு கொள்ளலாம்.