இஸ்கான் திருநெல்வேலி கோயில் வரலாறு
இஸ்கான் திருநெல்வேலி
ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராம் திருக்கோயில்
உலகெங்கும் 650க்கும் மேற்பட்ட கோயில் மற்றும் யோகா மையங்களுடன் செயல்படும் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், திருநெல்வேலியில் 2002ல் துவக்கப்பட்டது.
இஸ்கான் மதுரையில் 2001ல் கும்பாபிஷேகம் நிறைவுற்ற பிறகு, 2002ல் திருநெல்வேலியில் இஸ்கான் துவக்கப்பட்டது.
இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் திரு.சங்கதாரி பிரபு அவர்களின் தலைமையின் கீழ் இரண்டு முழுநேர பக்தர்கள் திருநெல்வேலியில் பிரச்சாரத்தை துவக்கினர்.
முதலில் பாளையங்கோட்டையில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இஸ்கான் துவக்கப்பட்டது. இங்கு ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகளும், தினசரி காலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. பிறகு படிப்படியாக சுற்றியுள்ள கிராமங்களில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பல நலன் விரும்பிகளும் இஸ்கான் ஆயுள் உறுப்பினர்களாக இணைந்தனர். அச்சமயம் நலன் விரும்பி ஒருவர், இஸ்கான் கோயில் கட்ட ஒரு இடத்தை அன்பளிப்பாக வழங்குவதாக கூறினார். ஆனால் அவர் வழங்க இருந்த இடம் அச்சமயம் பொதுமக்கள் வந்து போவதற்கு ஏதுவானதாக இல்லை. எனவே திரு.சங்கதாரி பிரபு அவர்கள், அவரிடம் கிருஷ்ணர் கோயில் அனைவரும் வந்து போகும் வண்ணம் முக்கிய இடத்தில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே அவர் தன்னிடம் மற்றொரு இடம் உள்ளது. ஆனால் அதனை நன்கொடையாக தர இயலாது. அது நகரின் முக்கியமான இடம் என்றார்.
அந்த இடம் தான் இப்போது கட்டப்பட்டிருக்கும் கோயில் உள்ள இடமாகும். அதாவது திருநெல்வேலியின் முக்கியமான பிரதான சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது.
பிறகு மதுரை பக்தர்கள் பலர் அந்த இடத்தை வாங்க நன்கொடை தர முன்வந்தனர். இவர்கள் வழங்கிய நன்கொடையில் 2003ல் இந்த இடம் வாங்கப்பட்டது. தென்னிந்திய இஸ்கான் தலைவர் தவத்திரு. பானு ஸ்வாமி மஹாராஜ் அவர்கள் பூமிபூஜை செய்து, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இங்கு சிறிய குடிசை ஒன்று அமைக்கப்பட்டு, வழிபாடுகள் துவக்கப்பட்டன.
பிறகு 2005ல் புதிய கோயிலின் முதல் தள கட்டுமானப் பணிகள் நிறைவுற, ஸ்ரீஸ்ரீ கௌர நித்தாய் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் துவங்கியது.
பிறகு இஸ்கான் ஆயுள் உறுப்பினர்கள்,சேவாதாரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கோயில் கட்டுமான பணிக்காக நிதி வழங்கினர்.
கோயில் பணி முழுவதும் முடிவுற, 2006ல் ஜனவரி 11ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு இஸ்கான் ஜிபிசியும், ஆன்மீக குருவமான தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் தலைமை தாங்கினார். தவத்திரு.பக்தி பிரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்களும் முன்னிலை வகித்தார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராமரின் அஷ்டதாது விக்ரஹங்கள் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. அன்று முதல் திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர கிராமங்கள் பலவற்றில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள், புத்தக விநியோகம், ஹரிநாம சங்கீர்த்தனம், மாணவர் நல நிகழ்ச்சிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற துவங்கியது.
ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்கள் மற்றும் அறிவுரைகளின் கீழ் இன்று ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வில் பக்குவம் அடைந்து வருகின்றனர். மேலும் அனைவரும் பயன்பெறுவதற்காக இஸ்கான் திருநெல்வேலி கிளை
ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குறைந்த நன்கொடையில் விநியோகித்து வருகிறது. படித்த இளைஞர்களும், மருத்துவர்களும், ஆசிரியர்களும் கூட இஸ்கான் புத்தக விநியோக சேவையில் ஈடுபடுகின்றனர்.
கல்லூரிகளில் இஸ்கான் நடத்தும் யோகா வகுப்புகள், மாணவர்கள் நன்னடத்தையுடன் கல்வியில் கவனம் செலுத்த உதவுகிறது. குறிப்பாக வேண்டாத பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட இங்கு கற்றுக் கொடுக்கப்படும் ஜப யோகா மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இஸ்கான் வளாகத்தில் நடத்தப்படும் ஜப யோகா கேம்ப்கள் மூலம் பல தரப்பட்ட மாணவர்களும் பயன்பெறுகின்றனர். தவிர குழந்தைகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களுக்கான கேம்ப்களும் நடைபெறுகின்றன.
மேலும், ஜபதியானம், வழிபாட்டு நிகழ்ச்சிகள், பகவத்கீதை சிறப்புரை, மாணவர்கள் நல்லொழுக்க வகுப்புகள், பிரசாத அன்னதானம், பகவத்கீதை விநியோகம், மக்கள் நல மஹால் நிகழ்ச்சிகள் என்று பலவாறு இஸ்கான் தனது பணிகளைச் செய்து வருகிறது.