ஸ்ரீநரசிம்ம சதுர்தசி
பகவான் ஸ்ரீநரசிம்மர் அவதரித்த திருநாள்
ஸ்ரீநரசிம்ம சதுர்தசி என்பது பகவான் ஸ்ரீநரசிம்மர் அவதரித்த திருநாளாகும். அதாவது நரசிம்மர், சதுர்தசி நாளன்று அவதரித்ததால் நரசிம்ம சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இல்லாத இடமே இல்லை, அவர் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பதை நிரூபித்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஐந்தே வயது நிரம்பிய குழந்தையும், தனது பக்தனுமான பிரகலாதனின் வார்த்தைகளை காப்பாற்ற பகவானே வந்த அவதாரம். இந்நன்னாள் ஒவ்வொரு வருடமும் நரசிம்ம அவதாரத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீநரசிம்ம அவதாரம், மாலைப் பொழுதில்‘பகலும் இரவும் சந்திக்கும் சந்தியாநேரத்தில்’ நடந்தது. எனவே நரசிம்ம அவதார தினத்தன்று சந்தியாக் காலம் வரை விரதம் இருந்து ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இதன் மூலம் ஒருவர் நரசிம்மரின் திருவருளை பெற்று, விக்னங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.
அன்று நீர் கூட அருந்தாமல் முழுமையான விரதம் இருப்பது சிறப்பு. உடல் பலம் குறைந்தவர்கள் பசும்பால் மற்றும் பழங்கள் மட்டும் உண்ணலாம். விரதத்தின் முக்கிய அம்சம், ஸ்ரீநரசிம்மரை வழிபடுவதற்கான மனநிலையை பெறுவதே ஆகும். ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதும் விரதத்தின் முழுபலனை பெற உதவும்.
நரசிம்மர் பக்தர்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். சுவாமி ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் நரசிம்மரைப் பற்றி கூறுகையில், பகவான் நரசிம்மர் பிரகலாதரின் நன்மைக்காக மட்டுமின்றி மனிதகுலம் முழுவதின் நன்மைக்காகத் தோன்றினார். எல்லா விதமான பயத்திலிருந்தும், எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பக்தர்களைகாப்பவர் நரசிம்மர் ஆவார். நாம் எங்கு சென்றாலும் பகவான் நரசிம்ம தேவரையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டும், பகவானின் திவ்ய நாமங்களை ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரசிம்மர், விக்னங்களை தீர்ப்பதில் முதன்மையானவர்.
“யத் பாத பல்லவ யுகம் வினிதாய கும்பத்வந்வே ப்ரணாம சமயே ச கணாதி ராஜாவிக்னான் விஹந்தும் அலம் அஸ்ய ஜகத் த்ரயஸ்யகோவிந்தம் ஆதி புருஷம் தம் அஹம் பஜாமி “என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது.
அதாவது எந்த ஒரு காரியத்தினையும் நரசிம்மரை வழிபட்டு துவக்கினால் விக்கினங்கள் அனைத்தும் விலகி விடும். நரசிம்மரிடமிருந்தே விநாயகருக்கு விக்னங்கள் தீர்க்கும் சக்தி கிடைக்கிறது என்று பிரம்ம சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நரசிம்மரின் பாதங்களை விநாயகர் தன் தந்தங்களில் ஏந்துவதன் மூலம் விக்னங்கள் தீர்க்கும் சக்தியை நரசிம்மரிடமிருந்து விநாயகர் பெறுவதாக பிரம்மதேவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ண பக்தியை எதனாலும் தடை செய்ய முடியாது என்பதற்கு பிரகலாதரின் வாழ்வு மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். எனவே தான் சாஸ்திரங்கள், பிரகலாதரின் செயல்கள் பற்றி யார் ஒருவர் கவனமுடன் கேட்கின்றாரோ அவர் பகவானின் திவ்ய ஸ்தலத்தை அடைவது உறுதி என்று குறிப்பிடுகிறது.
பிரகலாதர் மிகச் சிறந்த பக்தர்களுக்கிடையிலும் மேன்மை மிக்கவர் ஆவார். பகவானே நரசிம்மராக அவதாரம் செய்துள்ளார் என்றால், எந்த அளவிற்கு பகவான் மீது பக்தி வைத்துள்ளார் என்பது புலப்படும். ஐந்தே வயது நிரம்பிய சிறுவனாக இருந்த போதிலும், தாயின் கர்ப்பத்தில் இருந்த போது கிருஷ்ண பக்தி சம்பந்தமாக ஸ்ரீநாரதர் அளித்த அனைத்து அறிவுரைகளையும் நினைவுகூர்ந்து அப்படியே செயல்படுத்தினார். தந்தையே பலவாறு இன்னல்கள் தந்த போதிலும், துயரத்தினாலோ அல்லது பாசத்தினாலோ கூட கிருஷ்ண பக்தியை விட வில்லை பிரகலாதர். சதா கிருஷ்ணரையே நினைத்து பகவானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். எனவே தான் பிரகலாதர் ‘ஸ்மரணம்’ எனப்படும் கிருஷ்ணர் மீதான நினைக்கும் ஆற்றலுக்கு உதாரணமாக போற்றப்படுகிறார். இத்தகைய பிரகலாதரின் உபதேசங்கள் மிகவும் பிரசித்தி மிக்கவை ஆகும். பிரகலாதரின் திவ்ய உபதேசங்களை படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் லட்சியத்தினை நிச்சயம் உணர்ந்து கொள்ளலாம்.
நரசிம்ம அவதாரம் மற்றும் பிரகலாதரின் உபதேசங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் அடங்கிய புத்தகங்கள் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களில் கிடைக்கின்றன.
நரசிம்ம அவதார தினத்தன்று, இஸ்கான் கோயிலில் மாலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறகின்றன. இதில் ஸ்ரீஸ்ரீலெக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம், பிரகலாத நரசிம்ம பிரார்த்தனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. அனைவரும் பங்கேற்று நரசிம்மரின் திருவருளை பெறலாம்.
ஸ்ரீ நரசிம்ம அவதார திருநாள் பற்றி மேலும் படிக்க