ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாள். தேய்பிறை எட்டாவது நாள். ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி நன்னாள்.
உயர்வான பலன்களை நல்கும் ரோஹிணி நட்சத்திரம் போன்ற மங்கலகரமான நட்சத்திரங்கள் வானில் பிரகாசித்திருக்க, ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இரவின் இருளில் வசுதேவர் மற்றும் தேவகியின் முன்பு பூரணச் சந்திரனைப் போல் அவதரித்தார்.
நான்கு கரங்களுடன், கரங்களில் சங்கு-சக்கரமும், கதை-தாமரையும் தாங்கி, ஸ்ரீவத்ஸக் குறியுடன், கௌஸ்துப ஹாரத்தை அணிந்து மஞ்சள் பட்டாடை உடுத்தி, கார்மேகம் போல் ஒளி வீசி, வைடூரிய மகுடமும் விலைமதிப்பற்ற கங்கணங்களும், காதணிகளும், பிற ஆபரணங்களும் உடல் முழுவதும் அணிந்து சிரசில் அடர்ந்த முடியுடன் தோன்றினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
பின் தேவகியின் வேண்டுகோளுக்கிணங்க பகவான், தன்னை சாதாரண குழந்தை உருவிற்கு மாற்றி பால்ய கிருஷ்ணராகஅவதாரம் செய்தார்.
எங்கெல்லாம், எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரிக்கின்றார். மேலும், பக்தரைக் காக்கவும், கொடியவரை அழிக்கவும், தர்ம நெறிகளை மீண்டும் நிலைநாட்டவும் யுகந்தோறும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரிக்கிறார்.
மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் வசீகரிப்பவராக அவதரித்தார். பொதுவாக ‘கிருஷ்ணா’ என்றாலே ‘அனைவரையும் வசீகரிப்பவர்’ என்று பொருள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எண்ணற்ற அவதாரங்களை ஏற்றுள்ளார்.
கிருஷ்ணரின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சம் உடையதாகும். ஆனால் கிருஷ்ண அவதாரம் அனைத்து சிறப்பு அம்சங்களும் பொருந்தியதாகும். உதாரணமாக, ஸ்ரீமோஹினி அவதாரம் – பகவானின் அழகிற்கு சிறப்பு பெற்ற அவதாரமாகும். ஸ்ரீநரசிம்ம அவதாரம் – பகவானின் எல்லையற்ற சக்திக்கு புகழ்பெற்ற அவதாரம் ஆகும். ஸ்ரீராம அவதாரம் – பகவானின் புகழுக்கு பெயர் பெற்ற அவதாரமாகும். ஸ்ரீமச்ச அவதாரம் – பகவானின் உன்னத அறிவை உணரச் செய்த அவதாரமாகும். நர-நாராயண அவதாரம் – துறவிற்கு புகழ்பெற்ற அவதாரமாகும். ஆனால் கிருஷ்ண அவதாரமோ முழுமையானது. ஏனெனில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மூல முழுமுதற்கடவுளாக விளங்குவதால் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் அப்படியே இப்புவிக்கு இறங்கி வந்துள்ளார்.
செல்வம், பலம், புகழ், அழகு, ஞானம், துறவு என்ற ஆறு வளமைகளும் பூரணமாக அடையப் பெற்றவரே பகவான் என்று அழைக்கப்படுகிறார் என்று விஷ்ணு புராணம் 1.19.65 குறிப்பிடுகிறது. கிருஷ்ணர் மேற்கூறிய தகுதியைப் பெற்றுள்ளதால் பகவான் என்று அறியப்படுகிறார்.
கிருஷ்ணரின் அவதாரத்திற்கு பல விதமான காரணங்கள் இருந்தாலும், கிருஷ்ணரே நேரடியாக அவதரிப்பதன் முக்கிய காரணம் பக்தர்களை வசீகரித்து மகிழ்ச்சி அளிப்பதற்கே ஆகும். அத்துடன் நாம் வாழ்க்கையை எப்படி இறை சிந்தனையில் நடத்த வேண்டும் என்பதை பகவத் கீதையின் வடிவில் உபதேசிப்பதற்காகவும் அவதரித்தார்.
சுருக்கமாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது திவ்யமான ஷியாமசுந்தர ரூபத்தினாலும், ரத்தினம் போன்ற உபதேசங்களினாலும் எல்லோர் இதயத்திலும் இடம் பிடிக்கவே அவதரித்தார் எனலாம். எனவே தான் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினம், ஜாதி, மத, இன, பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
‘ஜெயந்தி’ என்பதன் சிறப்பு
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஸ்ரீகோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி” என்று பல வகையான பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இதில் ஜெயந்தி என்ற சொல் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜெயந்தி – என்றால் சுப மங்கலகரமான நட்சத்திரங்களின் கூட்டம் என்று பொருள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏராளமான அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் ‘ஜெயந்தி’ என்ற சொல் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்கு மட்டுமே சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் கிருஷ்ணர் அவதரித்த போது, எல்லா நட்சத்திரங்களும் சுபமங்கலகரமாக வானில் கூடியதால் ‘ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’ என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று செய்ய வேண்டியது என்ன?
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, ஸ்ரீகிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்து, கிருஷ்ணா! இன்று நான் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கப் போகிறேன். தயவு செய்து உங்கள் கருணையை தரவும் என்று வேண்டி அன்று விரதத்தை துவக்க வேண்டும். தொடர்ந்து நள்ளிரவு வரை விரதம் இருக்க வேண்டும். (உடல்பலம் குறைந்தவர்கள் நீர், பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” என்ற மஹாமந்திரத்தை 108 மணி ஜபமாலையில் அதிகபட்சம் ஜபிக்க வேண்டும்.
ஸ்ரீலபிரபுபாதா எழுதிய ‘கிருஷ்ணா’ என்ற புத்தகத்தில் உள்ள கிருஷ்ணரின் அவதாரம் பற்றிய அத்தியாயத்தை படிப்பது நல்லது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அலங்கார தரிசனம் செய்ய வேண்டும். இஸ்கான் கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு அலங்காரம் இருக்கும்.
விரதம் முடிக்கும் விதம்: கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள், ஸ்ரீகிருஷ்ண பிரசாதங்களை உட்கொண்டு விரதத்தினை முடிக்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர் நல் ஆரோக்கியத்தையும், நல் அதிர்ஷ்டத்தையும் பெறுவார்.
– பவிஷ்ய புராணம்
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதத்தினை கடைபிடிப்பவரிடத்தில் ஸ்ரீலெக்ஷ்மி தேவி எப்போதும் குடியிருப்பார்.
– ஸ்கந்த புராணம்
மேலும் கிருஷ்ண ஜெயந்தி விரதம் பற்றிய விரிவான விபரங்களுக்கு